Sunday 2 September 2018

ஏன் சென்றீர்கள் கோக்ஷ்?

அபர்ணா செனின் படங்கள் தேடிப் பார்த்துக்கொண்டிருந்த நாட்களில் இயக்குனர் ரிதுபர்னோ கோக்ஷ் படங்கள் அறிமுகமானது. Unishe April-ல் ஆரம்பித்து அவரது படங்கள் மனதுக்குள் தொடர்ந்து ஒரு உரையாடலை, விவாதத்தை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
மனிதர்களின் அகவுலகை மிக சரியாக, இயல்பாக சொல்லியவர்களில் முக்கியமானவர் கோக்ஷ். அவரது படங்கள் நகரத்து பெண்களின் அதிகம் பேசாப்படாத உளச்சிக்கல்களை பேசுபவை. அவரது பெண் கதாபாத்திரங்கள் அம்மா, அக்கா, தோழியாகவும் பல சமயங்களில் நானாகவும் உணர்ந்து கொள்ளுமளவு யதார்த்தமானவை.
மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் (LGBT) உறவுகளை, உணர்வுகளை புரிந்துகொள்வதற்கான தொடக்கத்தை ரிதுபர்னோ கோக்ஷ் நடித்த படங்கள் ஏற்படுத்தின. 
ஒரு படம் பார்த்து முடிந்ததும் அது உண்டாக்கிய கேள்விகள், ஏற்கனவே உள்ள விமர்சனங்கள், அதற்கு கோக்ஷின் பதில்கள் என தேடி வாசித்து அடுத்த படத்திற்கு செல்வதற்குள் சில நாட்கள் ஆகும். அந்த நாட்கள் வேறு ஒரு உணர்வுப்பூர்வமான உலகத்தில் அற்புதமான மனிதர்களுடன் வாழச் செய்தது. 
சஞ்சய் நாக் இயக்கிய 'மெம்மரீஸ் இன் மார்ச்' படத்தில் கோக்ஷின் கதாபாத்திரம் நடிப்பு என்று சொல்ல முடியாது. காதலர்மீது அன்பு செலுத்தும் காட்சிகள் கோக்ஷ் தன் சக மனிதர்களிடத்தில் கொண்ட அளவு கடந்த அன்பின் வெளிப்பாடு.
                                        

தன்னை ஓரினச் சேர்க்கையாளராக வெளி உலகிற்கு அறிவித்துக் கொண்டவர். Arekti Premer Golpo என்ற படத்தில் மாற்று பாலினத்தவராக நடிக்க வேண்டி மார்பக அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்ளும் அளவு சினிமா எனும் கலையை காதலித்த கலைஞன்.    
சினிமாவின் இலக்கணம், தொழில்நுட்ப அறிவு எதுபற்றியும் தெரியாத எனக்கு மாற்று சினிமா மீதும், பிற மொழிப் படங்கள் மீதும் ஈர்ப்பை ஏற்படுத்தியவர் கோக்ஷ்.
ரிதுபர்னோ கோக்ஷ் மரணத்தை எனது தனிப்பட்ட இழப்பாகவே கருதுமளவு அவர் இயக்கிய, நடித்த படங்கள் மூலம் அவரை நேசிக்கிறேன். 
ஆகஸ்ட் 31 அவரது பிறந்தாளை ஒட்டி வெளியான ஒரு கட்டுரையை அவரை பிடிக்கும் என்று என்றோ சொன்னதை மனதில் வைத்து ஒரு தோழி அனுப்பி இருக்கிறார். பல நினைவுகளையும் அழுகையும் உண்டாக்கிய அந்த கட்டுரை இது :-https://www.filmcompanion.in/rituparno-ghosh-birth-anniversary-bengali-cinema/amp/

Friday 31 August 2018

பாதகஞ் செய்பவரைக் கண்டால்...

சம்பவம் : 1
பேருந்து நிலையத்தில் சிமெண்ட் திட்டில் உட்கார்ந்திருந்தேன். ஒரு கல்லூரி மாணவியும் அவள் பின்னால் ஒரு முதியவரும் வந்தார்கள். அந்த பெண் என் அருகில் உட்கார்ந்தாள். சிறிது நேரத்தில் என் பின்கையில் சாய்ந்தாள். திரும்பி பார்த்தபோது அந்த முதியவர் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார். மீண்டும் சில நொடிகளில் என் முதுகில் சாயவே கோபமாக திரும்பி பார்த்தேன். அந்த பெரியவர் அவள் மேல் விழுந்து விடுவதுபோல் உட்கார்ந்திருந்தார். அவள் பதட்டமாக இருந்தாள்.

நான் அந்தப் பெண்ணிடம், “உன் அப்பாவா” என கேட்டேன். இல்லை என்று தலையாட்டினாள்.

“சொந்தக்காரரா?” என்றதற்கும் இல்லை என்றாள்.

பெரியவரிடம், “போலிச கூப்பிடனுமா சார்” என்றேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது.
“போலிச கூப்பிடுவியோ.. கூப்பிடு பார்ப்போம், மரியாதை இல்லாம பேசற” என்று சத்தம் போட ஆரம்பித்தார். ”அதெல்லாம் போலீஸ் ஸ்டேசன்ல பேசிக்கலாம், இருங்க கூப்பிடறேன்” என போனை எடுக்கவும், கூட்டம் சேர்ந்து ஆளாளுக்கு என்ன என்று கேட்டார்கள். அந்த பெரியவர் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே வேகமாக போய்விட்டார்.

பக்கத்தில் அந்த பெண் பயந்து, வியர்த்து நின்றிருந்தாள். இதற்குமுன் அவள் பயணம் செய்த பேருந்தில் இருந்தே அந்த ஆள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என கூறினாள்.
ஏன் நீ திட்டவில்லை என கேட்டதற்கு, “பயமா இருந்துச்சுக்கா.. யாராவது எதாவது சொல்லிருவாங்களோன்னு” என்றாள்.
----------------------------------------------------
சம்பவம் : 2
பேருந்தில் எனக்கு முன்னிருக்கை காலியாகும்போது பின்னால் இருந்து ஒரு பெரியவர் எல்லோரையும் தள்ளிக்கொண்டு வேகமாக வந்தமர்ந்தார். அங்கிருக்கும் பெண்களை அருகில் அமர்ந்துகொள்ள சொன்னார். நல்லக் கூட்டம் இருந்தும் யாரும் உட்காரவில்லை. அருகில் நின்றிருந்த ஒரு மாணவியிடம் அவள் கல்லூரி பற்றிக் பேச்சுக் கொடுத்தார். பலமுறை அந்த பெண்ணின் கைகளைத் தொட்டு அருகில் உட்கார சொன்னார். அவள் எரிச்சலாகி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள்.
பெரியவர் வேறு இருக்கையில் உட்கார்ந்திருந்த தன் நண்பரை அழைத்து பக்கத்தில் இருத்திக்கொண்டார்.
அந்த பெண்ணிடம், ”உனக்கு தெரிஞ்சவங்களா” என்று கேட்டேன்.
“தெரியலக்கா.. ஊர்ல பார்த்திருப்பாரா இருக்கும்”
“தொட்டு பேச வேண்டான்னு அவர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”
”இல்லக்கா ஒருவேள தெரிஞ்சவங்களா இருந்து வீட்ல சொல்லிட்டா என்ன பண்றதுன்னுதான் பின்னால வந்து நின்னுக்கிட்டேன்” என்றாள்.
----------------------------------------------------
இந்த இரண்டு சம்பவங்களிலும் அந்த பெண்களின் பதில் தெளிவாக உணர்த்துவது சமூகத்தின் மீதான அச்சம். 

1. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணையே ஊர் தவறாக பேசுவதும், கற்பு புனிதத்தன்மை போன்ற விசயங்களை முன்னிருத்தி பாலியல் வன்கொடுமைகளை சமூகம் கையாளுவதுமே இளம் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்ல பயப்படுவதன் முதன்மை காரணம். 
2. இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றிரண்டு தொடர்ந்து நடந்து அதை வீட்டில் சொல்லும்பட்சத்தில் தனது கல்வி பாதிக்கப்படும் என கிராமப்புற பெண்கள் அதிகம் அச்சப்படுகிறார்கள்.
3. வயதானவர்கள் எல்லோரும் உத்தமர்கள் எனும் குருட்டாம்போக்கு நம்பிக்கையை பிள்ளைகளிடத்தில் விதைப்பதால், பாலியல் தொந்தரவுகள் நடக்கும்போது அது அன்பா, பிரச்சினையா என்கிற குழப்பத்தின் காரணமாக முடிவெடுக்க தாமதிக்கிறார்கள்.
----------------------------------------------------
பிள்ளைகளை பாதுகாக்க எப்போழுதும் அவர்களை பின்தொடர்வது சாத்தியமில்லை. பிள்ளைகளிடத்தில் உரையாடுங்கள். எது பிரச்சினை என புரியவையுங்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது தைரியமாக எதிர்க்கச் சொல்லுங்கள். பிரச்சினை செய்பவர் நெருங்கிய உறவாகவே இருந்தாலும் நீங்கள் பிள்ளைகளுக்கே ஆதரவாக நிற்பீர்கள் என்பதை புரியவையுங்கள். பிள்ளைகளை நம்புங்கள். நீங்கள் நம்புவதை அவர்கள் உணரச் செய்யுங்கள்.

சரி. இதுவெல்லாம் இங்கே எழுதி பகிர்ந்தால் மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. உங்கள் ஊரில், உங்களை சுற்றி நடக்கும் சிறுவர்கள், இளம்பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை இனியொருமுறை கண்டும் காணாமலும் இருக்காதீர்கள். நீங்கள் அவர்களுக்காக கொடுக்கும் ஆதரவு குரல் வாழ்நாள் முழுவதும் தொடரும் அச்ச உணர்வு மற்றும் மனவழுத்தத்தில் இருந்து அவர்களை காக்கும் மிகப்பெரிய ஆயுதம். 
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. 
- பாரதியார்.

Tuesday 23 January 2018

செம்புலம் - இரா. முருகவேள் (நாவல்)


தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு ஆளாகும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை, அதன் உண்மை நிலையை பிரச்சினைகள் நிறைந்திருக்கும் அதன் சமகாலத்திலேயே எழுத்தின்மூலம் பதிவு செய்திருப்பதற்காக தோழர் இரா. முருகவேள் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

கதை நடக்கும் பகுதியில் அதே ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு வளர்ந்தவள் என்ற வகையில் வாசித்து முடித்து இன்னமும்கூட ஒருவித கொதிநிலையிலேயே மனம் இருக்கின்றது. நமது நியாயமான கோபங்களை, காயங்களை இன்னொருவர் பேசுகையில் அதுவும் எழுத்தின்மூலம் உரக்கப் பேசுகையில் எழும் நிறைவை இந்நூல் தந்தது.

வீட்டிற்கொரு பூரணி

மேற்கு தமிழகத்தில் சாதியை இறுக்கமாக பற்றியிருக்கும் அடித்தளமாக விளங்குபவர்கள் பெண்கள். ஒரு கலப்பு மணத்தை வெளியே முறுக்கிக்கொண்டு திரியும் ஆண்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பெண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. உறவுகளில் ஒருவர் கலப்பு மணம் செய்துவிட்டால் அதன் எதிர்ப்புக் குரலை பல ஆண்டுகளுக்கு கனன்றுக் கொண்டிருக்கச் செய்பவர்கள் பெண்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட பெரும்பாலான குடும்பங்கள் வெளிப்படையாகவே பெண்கள் தலைமையில் இயங்கியவைதான்.

இன்று பெருகிவிட்ட சாதிக்கட்சிகள் ஆதிக்க மனநிலையை வீட்டில் இருக்கும் பெண்களில் இருந்தே துவக்கச் சொல்கிறது. தங்கள் பெண்களை அடக்க இவர்கள் கையாளும் முறைதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. நீ ஒரு இளவரசி அல்லது மகாராணி என்பது இங்கு மிகப்பெரிய வசியச் சொல். இங்கு ஒரு பெண்ணுக்கு படிக்க, வேலை பார்க்க எல்லா சுதந்திரமும் உண்டு. ஆனால் அந்த கல்லூரி, உடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வேலை பார்க்கும் இடம், முதலாளி இப்படி சுற்றி இருக்கும் அனைவருமே அதே சாதியை சேர்ந்தவர்களாகவோ குறைந்தபட்சம் புழங்கும் சாதியாகவோ(பிற சாதியை சேர்ந்த பிற்படுத்தபட்ட வகுப்பினர்) இருக்கும் ஒரு வட்டத்தை மிகத் தெளிவாக நிர்ணயம் செய்கிறார்கள்.

ஒருபக்கம் தாங்களே அடிமையாக இருக்கும் பெண் சமூகம் இன்னொரு சமூக மக்களிடம் ஆதிக்கம் செலுத்துவதை பெருமையாக நினைப்பதற்கு பின்னால் இருக்கும் உளவியல், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதாக இருக்கலாம்.

கதையில் பூரணியும் இப்படி தன் உரிமை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்யப்பட்ட வட்டத்தினுள் இளவரசியாகவும் அரசியாகவும் வளரும் பெண். பூரணியின் அத்தை கதாபாத்திரமும், அப்பத்தாவின் கதாபாத்திரமும் இல்லாத குடும்பங்களே இல்லை என சொல்லலாம். பெண்களை திருமணம் செய்த கையோடு அவளுக்கும் பிறந்த வீட்டிற்கும் இருக்கும் உறவை பெற்றவர்களே வெட்டிவிடுகிறார்கள். காலங்காலமாக ஆண் வாரிசுகளே சொத்தை அனுபவித்துக் கொள்வதும், பெண்களின் சொத்துரிமையை பறித்துக் கொண்டு சீர் செய்வதோடு நிறுத்திவிடுகிறார்கள். பின்னாட்களில் கணவரை இழந்து/பிரிந்து வாழும் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டினராலும் எல்லா வகையிலுமே புறக்கணிக்கப்படுகிறார்கள். அதே சமயம் நீதிமன்றம் சென்று போராடி சொத்து வாங்கியவர்களும் உண்டு. ஆனால் அதன்பின் அந்த பெண்ணின் பெற்றோர்கள்கூட அவர்களை ஒதுக்கி விடுவார்கள். எப்படி பார்த்தாலும் ஏதோ ஒரு இழப்பை எதிர்கொண்டே ஆகவேண்டும். இன்று மேற்கு மாவட்டங்களில் இருக்கும் மிக முக்கியமான இப்பிரச்சினையை தெளிவாகவும், விரிவாகவும் பேசியிருப்பதில் மகிழ்ச்சி.

இன்னும் எத்தனை பாஸ்கர்கள்??

தற்போதைய அடக்குமுறை மற்றும் வன்கொடுமைகளுக்கு மத்தியில்  தன் சமூக மக்களின் உரிமைக்காக போராட காலனிக்கு ஒரு பாஸ்கர் உருவாவதே பெரிய செயல். அப்படி வளர்பவர்கள் நடுசாலையில் கொல்லப்படுகின்றனர், இரயில் தண்டவாளங்களில் வெட்டி வீசப்படுகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் யார் என்று ஊருக்கே தெரியும். கொலை செய்தவர்களின் தலை மறைவு, பின் கைது சம்பவங்களும் நடக்கும். சில நாட்களிலேயே மீண்டும் கொலைக்கார்கள் வெள்ளை வேட்டி சகிதம் ஊருக்குள் திரிய, கொல்லப்பட்டவரின் குடும்பமும், சமூகமும் அனாதரவாக நிற்கும். இந்த அரசு எப்பவும் போல் ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்கு பல்லிளிக்கும். இவை எல்லாம் தாண்டி இன்னொரு பாஸ்கர் உருவாவது அவ்வளவு எளிதல்ல.

ஆனாலும் உருவாகிறார்கள். போராடுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.

தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் வெளிப்படையாக நடக்கும் சாதி சண்டைகள் போல் மேற்கு மாவட்டங்களில் நடப்பதில்லை. இங்கு பொருளாதார ரீதியாக அருந்ததியினர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களை மேலே வளரவிடாமல் வைத்திருப்பதில் ஊருக்குள் இருக்கும் ஆதிக்க சாதி பெரியோர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அவர்கள் தங்களிடம் இதமாக பேசுவதை அன்பாக இருப்பதாக இங்கு எளிய மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்த இதமெல்லாம் நாம் அவர்கள் வாசலோடு நிற்கும்வரை மட்டும்தான்.

கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மூடுப்படுவதற்கு சாதியும் ஒரு காரணம் என்பதை நாவலில் சுட்டிக் காட்டியிருப்பது மிகச்சரி. அரசு வழங்கும் சலுகைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எவரும் படித்து வேலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் உள்ளூர் ஆதிக்கச் சாதி முதலாளிகள் தனி கவனம் செலுத்துவார்கள்.

கேம்ப்கூலியும் செங்கொடியும்

ஊரின் தொடக்கத்தில் இருக்கும் சென்சார் கதவுகள் கொண்ட பங்களா வீடுகளும், இன்னும் சிமெண்ட் தரையைக்கூட காணாத காலனி குடிசைகளும் உழைப்புச் சுரண்டலின் அடையாளமாய் நிற்கிறது.

நொய்யல் ஆற்றில் நீர் திருடிய தொழிற்சாலைகள் போலவே ஊர் பொது வாய்க்காலில் தண்ணீர் திருடும் பெருந்தோட்டக்காரர்கள், தேங்காய் நார் தொழிலின்மூலம் கிராமப்புறங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமயமான கதை, மட்டை மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், போட்டதை தின்றுவிட்டு பண்ணையம் பார்த்த ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறையினர் தற்போது பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிடுவதால், தெற்கிலிருந்து கேம்ப் கூலிக்கு இளம் பெண்களை அழைத்துவந்து அடிமைபோல் நடத்துவது, தொழிலாளர்களை சுரண்டும் முதலாளிகள், சாதிச் சங்கங்களின் தொடக்கம், அவை கட்சிகளாக உருவான பிண்ணனி, தன்னார்வ அமைப்புகள் இயங்கும் முறைகள் என நடப்பில் இருக்கும் எல்லா பொது பிரச்சினைகளையும் அதன் நுட்மான தகவல்களுடன் நாவல் பேசுகிறது.

செங்கொடி தோழர்கள் மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் முன்னிற்பவர்கள். இன்று கிராமப்புற மக்கள் அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் இடத்துக்கு முன்னேறியிருப்பதிலும், கல்வி கற்பதிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு நிச்சயம் உண்டு. விசைத்தறி உரிமையாளர்கள் ஒருவகையில் பெரிய மில் முதலாளிகளை நம்பி பிழைக்கும் கூலிகளாக இருந்தாலும் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கமுடியாததன் பிண்ணனியில் ஒருவேளை சாதியும் இருக்கலாம் என்கிற எண்ணம் இந்நூலை வாசிக்கும்போது வலுவானது. இன்னொருபுறம் மக்களுக்கும் அமைப்புக்கும் இடையில் சித்தாந்தங்களை புரிய வைப்பதில் ஒரு தூரம் இருக்கின்றது. மக்களுக்கு புரியாத எந்த போராட்டமும் புரட்சியாக மலராது என்பதை தோழர்களும் உணரவேண்டும்.

விசைத்தறி உரிமையாளர்கள், மட்டைமில் முதலாளிகள், தென்னை தோட்டக்காரர்கள், காவல் துறையினர், தன்னார்வ அமைப்பினர், ஒடுக்கப்பட்ட மக்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர் தரப்பு நியாயத்திலிருந்து பேசுவது போன்று நாவல் அமைந்திருக்கிறது. இது சரி, இது தவறு எனும் போதனைகளை ஆசிரியர் எந்த இடத்திலும் வைப்பதில்லை. அதை தொடர்ந்து நாவலுக்கு முடிவை எழுதாமல் விட்டிருக்கிறார். ஒருவகையில் சொல்லாமல் விட்ட முடிவு அச்சமூட்டுகிறது. விடிவுகாலமே இல்லை எனும் அவநம்பிக்கைக் கொள்ளச் செய்கிறது.  

நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே அமர்வில் வாசிக்க வைக்கும் விறுவிறுப்பான நடை. ஒரு கதையை வாசித்ததுபோல் அல்லாமல், ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வு நாவலில் இருந்தது. இலக்கிய வரையறைகளுக்குள் இந்நாவல் உள்ளதா என்ற ஆராய்ச்சிகள் பொருளற்றவை. ’கலை மக்களுக்காகஎன்கிற வகையில், கொங்கு மண்டலம் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை சமகாலத்தில் மிகச்சரியாக பதிவு செய்திருக்கும் முக்கியமான நூல் இது.