சம்பவம் : 1
பேருந்து நிலையத்தில் சிமெண்ட் திட்டில் உட்கார்ந்திருந்தேன். ஒரு கல்லூரி மாணவியும் அவள் பின்னால் ஒரு முதியவரும் வந்தார்கள். அந்த பெண் என் அருகில் உட்கார்ந்தாள். சிறிது நேரத்தில் என் பின்கையில் சாய்ந்தாள். திரும்பி பார்த்தபோது அந்த முதியவர் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார். மீண்டும் சில நொடிகளில் என் முதுகில் சாயவே கோபமாக திரும்பி பார்த்தேன். அந்த பெரியவர் அவள் மேல் விழுந்து விடுவதுபோல் உட்கார்ந்திருந்தார். அவள் பதட்டமாக இருந்தாள்.
நான் அந்தப் பெண்ணிடம், “உன் அப்பாவா” என கேட்டேன். இல்லை என்று தலையாட்டினாள்.
“சொந்தக்காரரா?” என்றதற்கும் இல்லை என்றாள்.
பெரியவரிடம், “போலிச கூப்பிடனுமா சார்” என்றேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது.
“போலிச கூப்பிடுவியோ.. கூப்பிடு பார்ப்போம், மரியாதை இல்லாம பேசற” என்று சத்தம் போட ஆரம்பித்தார். ”அதெல்லாம் போலீஸ் ஸ்டேசன்ல பேசிக்கலாம், இருங்க கூப்பிடறேன்” என போனை எடுக்கவும், கூட்டம் சேர்ந்து ஆளாளுக்கு என்ன என்று கேட்டார்கள். அந்த பெரியவர் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே வேகமாக போய்விட்டார்.
பக்கத்தில் அந்த பெண் பயந்து, வியர்த்து நின்றிருந்தாள். இதற்குமுன் அவள் பயணம் செய்த பேருந்தில் இருந்தே அந்த ஆள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என கூறினாள்.
ஏன் நீ திட்டவில்லை என கேட்டதற்கு, “பயமா இருந்துச்சுக்கா.. யாராவது எதாவது சொல்லிருவாங்களோன்னு” என்றாள்.
----------------------------------------------------
சம்பவம் : 2
பேருந்தில் எனக்கு முன்னிருக்கை காலியாகும்போது பின்னால் இருந்து ஒரு பெரியவர் எல்லோரையும் தள்ளிக்கொண்டு வேகமாக வந்தமர்ந்தார். அங்கிருக்கும் பெண்களை அருகில் அமர்ந்துகொள்ள சொன்னார். நல்லக் கூட்டம் இருந்தும் யாரும் உட்காரவில்லை. அருகில் நின்றிருந்த ஒரு மாணவியிடம் அவள் கல்லூரி பற்றிக் பேச்சுக் கொடுத்தார். பலமுறை அந்த பெண்ணின் கைகளைத் தொட்டு அருகில் உட்கார சொன்னார். அவள் எரிச்சலாகி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள்.
பெரியவர் வேறு இருக்கையில் உட்கார்ந்திருந்த தன் நண்பரை அழைத்து பக்கத்தில் இருத்திக்கொண்டார்.
அந்த பெண்ணிடம், ”உனக்கு தெரிஞ்சவங்களா” என்று கேட்டேன்.
“தெரியலக்கா.. ஊர்ல பார்த்திருப்பாரா இருக்கும்”
“தொட்டு பேச வேண்டான்னு அவர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”
”இல்லக்கா ஒருவேள தெரிஞ்சவங்களா இருந்து வீட்ல சொல்லிட்டா என்ன பண்றதுன்னுதான் பின்னால வந்து நின்னுக்கிட்டேன்” என்றாள்.
----------------------------------------------------
இந்த இரண்டு சம்பவங்களிலும் அந்த பெண்களின் பதில் தெளிவாக உணர்த்துவது சமூகத்தின் மீதான அச்சம்.
1. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணையே ஊர் தவறாக பேசுவதும், கற்பு புனிதத்தன்மை போன்ற விசயங்களை முன்னிருத்தி பாலியல் வன்கொடுமைகளை சமூகம் கையாளுவதுமே இளம் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்ல பயப்படுவதன் முதன்மை காரணம்.
2. இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றிரண்டு தொடர்ந்து நடந்து அதை வீட்டில் சொல்லும்பட்சத்தில் தனது கல்வி பாதிக்கப்படும் என கிராமப்புற பெண்கள் அதிகம் அச்சப்படுகிறார்கள்.
3. வயதானவர்கள் எல்லோரும் உத்தமர்கள் எனும் குருட்டாம்போக்கு நம்பிக்கையை பிள்ளைகளிடத்தில் விதைப்பதால், பாலியல் தொந்தரவுகள் நடக்கும்போது அது அன்பா, பிரச்சினையா என்கிற குழப்பத்தின் காரணமாக முடிவெடுக்க தாமதிக்கிறார்கள்.
----------------------------------------------------
பிள்ளைகளை பாதுகாக்க எப்போழுதும் அவர்களை பின்தொடர்வது சாத்தியமில்லை. பிள்ளைகளிடத்தில் உரையாடுங்கள். எது பிரச்சினை என புரியவையுங்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது தைரியமாக எதிர்க்கச் சொல்லுங்கள். பிரச்சினை செய்பவர் நெருங்கிய உறவாகவே இருந்தாலும் நீங்கள் பிள்ளைகளுக்கே ஆதரவாக நிற்பீர்கள் என்பதை புரியவையுங்கள். பிள்ளைகளை நம்புங்கள். நீங்கள் நம்புவதை அவர்கள் உணரச் செய்யுங்கள்.
சரி. இதுவெல்லாம் இங்கே எழுதி பகிர்ந்தால் மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. உங்கள் ஊரில், உங்களை சுற்றி நடக்கும் சிறுவர்கள், இளம்பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை இனியொருமுறை கண்டும் காணாமலும் இருக்காதீர்கள். நீங்கள் அவர்களுக்காக கொடுக்கும் ஆதரவு குரல் வாழ்நாள் முழுவதும் தொடரும் அச்ச உணர்வு மற்றும் மனவழுத்தத்தில் இருந்து அவர்களை காக்கும் மிகப்பெரிய ஆயுதம்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
- பாரதியார்.